ஆயர்ப்பாடி என்ன சுயம்வரம் நிகழும் இடமோ!?
“பத்துநாளும் கடந்த இரண்டாநாள்*
எத்திசையும் சயமரம் கோடித்து*
மத்தமாமலை தாங்கிய மைந்தனை*
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே”
– பெரியாழ்வார் திருமொழி
குழந்தை கண்ணன் பிறந்த பன்னிரண்டாம் நாளன்று, ஆயர்பாடியின் எல்லா இடங்களிலும், ஊரில் ஒரு தெரு விடாது, எல்லா இடங்களிலும், ஆயர்ப்பாடி முழுவதும் நன்மைக்கும், மங்கலத்திற்கும் அறிகுறியான வெற்றித் தூண்கள் நடப்பட்டு, வண்ண வண்ணத் தோரணங்கள் கட்டி சுயம்வரம் நிகழும் இடத்தினைப் போல் அலங்கரித்திருந்தனர்.
பிறந்த குழந்தையை உடனே எங்கும் வெளியில் கொண்டு வர மாட்டனர்; பத்து நாளுக்குப் பிறகு, ஏதேனும் ஒரு நல்ல நாளில், குழந்தைக்கு முறையான புனித நீராட்டல் (புண்ணிய ஸ்நானம்) செய்வித்து, அதனை, எந்த தீங்கும் அண்டாத வண்ணம் பூசை செய்து, அதன் பிறகே குழந்தையை, பிறந்ததிலிருந்து இருந்த அறையை விட்டு, வீட்டின் மற்ற இடங்களுக்குக் கொண்டு வருவர். அதுவரை, பெரும்பாலும் எல்லாரும் குழந்தையைத் தொட மாட்டனர். குழந்தையின் தாயும், தாயையும் சேயையும் பார்த்துக் கொள்ளும் செவிலி ஆகியோர் மட்டுமே குழந்தையைத் தொடுவர்; உத்தானம் செய்த பின்பே, மற்றவர்கள் குழந்தையைக் கையில் தூக்குவர்
குழந்தையான கண்ணனுக்கு, புனித நீராட்டல் செய்து, அவன் பிறந்திருந்த அறையை விட்டு, அனைவரும் காணும் வண்ணம் வந்ததும், மதங்கொண்ட ஆண்யனைகள் நிறைந்த கோவர்த்தன மலையைத் தாங்கி, ஆயர்களையும், ஆநிரைகளையும் காத்த வீரமகனை, ஆயர்கள் அனைவரும் குழந்தையான கண்ணனைத் தங்கள் கைகளில் ஏந்தி மகிழ்ந்தனர். ஆயர்ப்பாடியில் உள்ளோர் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்!
கிருஷ்ணா, முகுந்தா, மாதவா!