கோவிந்தன் குணம் பாடி – தாமோதரன்


🍀கோவிந்தன் குணம் பாடி 🍀– கோதை தமிழில் கோவிந்தனின் குணங்கள் – பதிவு 1

எம்பெருமானின் கல்யாண குணங்கள் எண்ணில் அடங்காதவை. “எண்ணின் மீதியன் எம்பெருமான்“- அதாவது எண்ணிறந்த திருக்குணங்களையுடையவன் என்றும், “ஈறில வண்புகழ் நாரணன்” அதாவது முடிவில்லாத திருக்கல்யாண குணங்களையுடையவன் என்றும் எம்பெருமானின் கல்யாண குணங்களைபற்றி மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில் சாதிக்கிறார்.

கோதை நாச்சியாரும் “என் கோவிந்தன் குணம் பாடி அளியத்த மேகங்காள் ஆவி காத்திருப்பேனே” என நாச்சியார் திருமொழியில் பாடுகிறாள்.

“அனந்த சௌலப்ய பூம்னா” – அதாவது அவனது சௌலப்ய குணத்திற்கு எல்லையே இல்லை. எம்பெருமானின் ஒவ்வொரு கல்யாண குணத்தையும் அளவிடமுடியாது.

வேதங்கள் அவனை ‘அகிலஹேய ப்ரத்யநீகன்’ என்கின்றன; தீய குணங்கள் எல்லாவற்றிற்கும் அவன் எதிர்த்தட்டானவன் என்றபடி. அவனிடத்திலுள்ளவையெல்லாம் கல்யாண குணங்களேயன்றி ஒரு வகையான தீயகுணமும் இல்லாமையால் அவ்வாறு சொல்லுகிறது.

எம்பெருமான் தானே ஆயர்குலத்தில் தேவகியின் புத்ரனாக, கிருஷ்ணனாக வந்து அவதரித்த மாயன்.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

🌹 மாயன் – பிறக்கும்போதே சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையனாக தோன்றிய மாயன்; மகன் ஒருவருக்கு அல்லாத மாமேனி மாயன், அதாவது சரவர்க்கும் பிதாவான சர்வேஸ்வரன் வாசுதேவருக்கு புத்ரனாக அவதரித்த மாயன், அவனே சர்வேஸ்வரன், அவனே நமக்கு ஸ்வாமி.

🌹 வடமதுரை மைந்தன் – “மைந்தன் மிடுக்கன், அதாவது உபய விபூதி ஐஸ்வர்யத்தால் வந்த மிடுக்கையுடையவன்

🌹 ஆயர்குலத்தினில் தோன்றிய அணிவிளக்கு – மங்கள தீபம் போன்றவன், அதாவது பிரகாசமான ஞானத்தையும் உடையவன், ஸ்வயம் பிரகாசமான ஞானத்தை ஸ்வரூபமாக உடையவன்.

🌹 தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் –

தாமோதரன்” என்பதற்கு நான்கு விதப் பொருள் சொல்வர்.

– பொருள் 1. தாம என்றால் கயிறு. உதர என்றால் வயிறு. பாலகன் கண்ணனாக தாய் யசோதையினால் வயிற்றைச் சுற்றி தாம்பு கயிற்றால் கட்டுண்ட எளிமையையும், எல்லையில்லாத சௌலப்ய குணத்தை பறைசாற்றும் பெயர் ‘தாமோதரன்’!

– பொருள் 2. தாம என்றால் இருப்பிடம் என்றும் ஒரு பொருள் உண்டு. உலகத்தனைக்கும் அவருடைய வயிறுதான் சொந்த இருப்பிடம். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவன் அவன். உலகத்தனையையும் தன் வயிற்றில் சுமந்து மகாப்ரளய காலத்திலே மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம் விழுங்கி வயிற்றில் வைத்து காத்தருளும் ஸர்வ ரக்ஷகன்.

– பொருள் 3. “உதார” என்பது பரிவு உணர்ச்சியைக் குறிக்கும். “தம” என்பது தன்னடக்கத்தைச் சொல்லும். அதனால் ‘தாமோதரன்’ என்ற சொல் ‘குன்றாத தன்னடக்கத்துடன் ஏழை, எளியவர்களிடம் சௌசீல்யமாய் மிகுந்த பரிவுடன் இருப்பவர்’ என்றும் பொருள் தரும்.

– பொருள் 4.தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை‘ என்ற ஆண்டாள் வாக்கிற்கு ‘தன்னை தரித்த தாய் தேவகியின் குடலைத் தன்னுடைய கர்ப்பவாசத்தால் தூய்மை ஆக்கியவன்’ என்றும் பொருள். ‘என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள், தேவகி!‘ என்பது போல.

இப்படி எண்ணற்ற கல்யாண குணங்களை உடைய எம்பெருமானை- மாயனை – யமுனைத்துறைவனை – தாமோதரனைப் பாடுவோம். இப்படி கோவிந்தனைப் பாடி பகவத் அனுபவம் பண்ணினால் ‘நம் பாவங்கள் எல்லாம் நெருப்பில் இட்ட பஞ்சு போல உருமாய்ந்து போகுமாம்‘ என்று கோதை நாச்சியார் இந்த பாசுரத்தில் சாதிக்கிறாள்.

ஆண்டாள் குழல்களில் சூடிக் களைந்ததால் பூச்சரங்கள் கண்ணனை பிச்சேற்ற வல்லவை, கோதை சூடி களைந்ததால் ரத்னா ஹாரமாக கொள்கிறான்.

‘கோதா’ என்றால் ‘மாலை’. ஆண்டாளே மாலை, அதாவது ‘மாலை’ மாலை கட்டினாள். ‘திருமாலை’ கட்டினாள். கோ(விந்)தா என்னும் படியாக கோவிந்தனுக்கு தன் வார்த்தையால் பாமாலை கட்டி நமக்கு ஆக்கி கொடுத்தாள், திருப்பாவையாக!

நாம சங்கீர்த்தனமே சிறப்பானது – “கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா! கோவிந்தா!”

– அடியேன் திருக்குருகூர் கண்ணன் இராமானுஜ தாஸன்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே

நந்தன நந்தன சுந்தர்யை கோதாயை நித்ய மங்களம்

🙏 ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

Damodaran Alangaram – Photo was captured by Adiyen on Diwali day at ISKCON, Vrindavan.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *