ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 12
ஆயர்பாடியில் காலைப்பொழுது மிக அழகாய் விடிந்து கொண்டிருக்கின்றது. புள்ளினங்கள் கலகலவெனத் தம் இன்னொலிகளை எழுப்புகின்றன. பசுக்கள் கன்றுகளை நாவால் நக்கியபடி கறவைக்குத் தயாராகி விட்டன. மலர்கள் செடிகொடிகளில் விரிந்து நின்றுகொண்டு, “இறைவனின் பூஜைக்கு எம்மைக் கொய்வீராக,” எனத் துடியாகத் துடித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அன்னை யசோதையும் உறங்கிக் கொண்டிருக்கும் தனது செல்லக் குழந்தையைத் துயிலெழுப்புகிறாள்:
“குழந்தாய்! கிருஷ்ணா, விழித்துக் கொள்; பொழுது விடிந்து விட்டது பார்! நூறு நூறாண்டுகள் (சரதம் சதம் சதம்) தீர்க்காயுசுடன் வாழ்வாயாக என் செல்லமே,” எனப் பல்லாண்டு கூறுகிறாள்.
இவ்வாறாக யசோதையால் தினம் தினம் நீண்ட நாட்களுக்கு தரிசிக்கப்பட்ட முகத்தைக் கொண்டவனான கிருஷ்ணனை நாம் தினமும் வாயினால் பாடி, தூமலர் தூவித் தொழுது, பூசனை செய்து வணங்குவோம்

