ஒரு நாள்… யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். ‘விரைவில் நமக்கு வெண்ணெய் கிடைக்கும்!’ என்ற எண்ணத்தோடு யசோதையின் அருகிலேயே இருந்தான் கண்ணன்.
அவள் கடைந்து முடிப்பதாகத் தெரியவில்லை. மெள்ள எழுந்த கண்ணன், தயிர்ப் பானையை எட்டிப் பார்த்தான். திரண்டு வந்த வெண்ணெய் மேலாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. ‘‘எனக்குத் தா!’’ என்று வாயைத் திறந்து கேட்கவும் கூச்சம். சாதுரியமாகப் பேச்சைத் தொடங்கினான் கண்ணன்.
‘‘அம்மா! இந்தத் தயிர்ப்பானை நடுவில், ‘கும்கும்’ என்று ஏதோ வெள்ளையாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறதே! அது என்ன?’’ என்றான்.
யசோதை சிரித்தாள். ‘தயிர் கடைந்தால் வருவது வெண்ணெய் என்று தெரியாதவன் போல் கேட்கிறானே கண்ணன்!’ என்று நினைத்த அவள், ‘‘கிருஷ்ணா! இது ஒரு மாதிரி பூதம். சில நேரம் தயிர்ப்பானையிலும் தோன்றும். கண்ணா. நீ இங்கே பக்கத்தில் நிற்காதே. தள்ளி தூரமாகப் போய்விடு!’’ என பதில் சொன்னாள்.
கண்ணனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘நாம் சாதுரிய மாகக் கேட்கிறோம் என்றால், இவள் அதற்கும் மேலாக பதில் சொல்கிறாளே!’ என்று எண்ணிய ஸ்வாமி மேலும் தொடர்ந்தார்.
‘‘அம்மா! அது பூதம் என்றால் ஆளை விழுங்கி விடாதா? நீ மட்டும் அதன் பக்கத்தில் இருக்கலாமா? அது உன்னை விழுங்கி விட்டால், நான் என்ன செய்வேன்? அந்த பூதம் நம்மை விழுங்குவதற்குள் அதை எடுத்து என் கையில் கொடுத்து விடு. நான் விழுங்கி விடுகிறேன். நாம் இருவருமே தப்பிக்கலாம்!’’ என்றான் கண்ணன்.
‘இத்தனூண்டு வெண்ணெய்க் காக இப்படிக் கெஞ்சுகிறானே குழந்தை!’ என்று கொஞ்சம்கூட இரக்கம் இல்லை யசோதைக்கு. ஒரு நிபந்தனை போட்டாள்.
‘‘இதோ பார் கண்ணா, நான் தயிர் கடைந்து முடிக்கிற வரையில் நீ ஆடினால் வெண்ணெய் தருவேன். நான் இடக் கையால் மத்துக் கயிற்றை இழுக்கும்போது, நீ இடக்காலைத் தூக்க வேண்டும். நான் வலக் கையால் இழுக்கும் போது, உன் வலக் கால் மேலே இருக்க வேண்டும். மாற்றி மாற்றி இப்படித் தாளம் தப்பாமல் ஆடி னால் வெண்ணெய் தருவேன்!’’ என்றாள் யசோதை.
அகில உலகங்களையும் ஆட்டி வைக்கும் ஸ்வாமி, யசோதை போட்ட நிபந்தனைப்படியே ஆடினான்.






