️ விட்டுசித்தன் மனத்தே கோயில்கொண்ட கோவலன்
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிய திருமொழி பாசுரம்:
“வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே
கோயில்கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில்வண்ணனை
ஆயரேற்றை அமரர்கோவை அந்தணர்தம் அமுதத்தினை
சாயைபோலப் பாடவல்லார் தாமும் அணுக்கர்களே.“
– பெரியாழ்வார் திருமொழி – 5-4-11 (சாற்றுமுறை பாசுரம்)
பொருள்: வேயர்களுடைய வம்சத்தில் அவதரித்த பெரியாழ்வாருடைய ஹ்ருதயத்தில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கிற கோபாலனும், கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தையுடையனும், இடையர்களுக்குத் தலைவனும், நித்யஸூரிகளுக்கு நிர்வாஹம், சனகர் முதலிய மஹரிஷிகளுக்கு அம்ருதம்போல் இனியதுமான எம்பெருமானை பாடவல்லவர்கள் நிழல்போல எம்பெருமானை எப்போதும் அணுகி இருக்கப் பெறுவர்கள்.
Meaning: Gopalan, the dark cloud-hued Lord, the cowherd-chief, the king of celestials, has his temple in the Jeeva of Vishnuchitta, scion of the Veyar clan. These songs in his praise are like Amrutam for the learned. Those who can sing, will become inseparable from Lord, like his shadow.
ஆழ்வார் பாசுரங்களில் ஆசார்ய வைபவம் – ஸ்ரீ எம்பார்
ஒருசமயம் எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பியைத் திருவடி தொழுவதற்கென்று அங்கு எழுந்தருளின காலத்தில், சில ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பாரிடம் வந்து “சாயைப்போலப் பாடவல்லர்’ என்ற அடியின் கருத்தை அருளிச் செய்யவேண்டும்” என்று பிரார்த்திக்க, (பெரியாழ்வார் திருமொழி சாற்றுமுறை பாசுரம்)
அதற்கு எம்பார், “எம்பெருமானாரிடத்தில் இதன் பொருளை நான் கேட்டுணர்ந்ததில்லை; இப்போது அவரைக்கேட்டு உங்களுக்குச் சொல்லுவோமென்று பார்த்தால், அவர் திருக்கோட்டியூர்க்கு எழுந்தருளியிருக்கிறார்; ஆகிலும் நான் உங்களுக்கு இப்போதே சொன்னேனாகவேணும்” என்று , எம்பெருமானாருடைய திருவடி நிலைகளையெடுத்துத் தம் திருமுடியின்மீது வைத்துக் கொண்டு,
“இப்போது உடையவர் எனக்கு அருளிச்செய்தார். சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று,
“அந்தணர்தம் அமுதத்தினைப் பாடவல்லார் சாயைப்போல அணுக்கர்கள்” என அவ்வயித்துப் பொருள் கொள்ளுங்கள்’ என்றருளிச் செய்தனராம்.
அதாவது “தம்முடைய நிழல் தம்மை விட்டு அகலாதவாறு போல, எம்பெருமானைப் பாடுமவர்கள் அவ்வெம் பெருமானைவிட்டு இறையும் அகலாது அவன்றனக்கே அந்தாணிச் சேவகராப் பெறுபவர்” என எம்பார் அர்த்தம் ஸாதித்தருளினாராம்.
ராமானுஜ பதச்சாயையார் (நிழல்) என்றும் அழைக்கப்படும்
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம்
