எத்திறம்! உரலினோடு


கண்ணன் யசோதையுடன் விளையாடி, அவள் கையால் அடி வாங்கி, அவள் கையால் கட்டுப்பட்டிருந்த அனுபவத்தை நினைத்து, ‘எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!” என்று ஆறுமாதம் மயங்கி மோஹித்திருந்தாராம் ஸ்வாமி நம்மாழ்வார்!

கண்ணனின் எளிமை குறித்து ஆழ்வார்களுக்கு பல அனுபவங்கள். பராங்குசன், சடகோபன், மாறன் என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் தன் இறை அனுபவத்தை பாடலாக சொல்லிக் கொண்டு வருகிறார். அவரது சீடரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் எழுதிக் கொண்டு வருகிறார். ஒருபாடல்…

பத்துடை அடியவர்க்கு எளியவன்; பிறர்களுக்கு அரிய வித்தகன்
மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு …

என்று சொல்லிக் கொண்டு வந்தவர் அப்படியே மெய்மறந்து இருந்துவிட்டார்.

அதாவது உலகேழும் ஆளும் தெய்வம், ஆயர் குலத்தில் உதித்து, யசோதையுடன் விளையாடி, அவள் கையால் அடி வாங்கி, அவள் கையால் கட்டுப்பட்டு…..இவ்வளவு எளியவானக ஒரு கடவுள் இருக்கமுடியுமா என்று எண்ணி மனமிக மகிழ்ந்து, மெய் மறந்து நிற்கிறார். நமெக்கெல்லாம் இப்படி எப்போதாவது சில நொடிகள் வாய்ப்பதுண்டு. உடனே நிகழ்கால நிகழ்வுகள் அடுத்த விநாடி கீழே கொண்டு வந்துவிடும்.

ஆனால் நம்மாழ்வார் மெய் மறந்து இருக்கிறார், இருக்கிறார், இருக்கிறார்… ஆறுமாதமாக அடுத்த வரி சொல்லாமல் நிற்கிறார். பாட்டு எழுதிக் கொண்டு இருக்கும் மதுரகவி ஆழ்வாருக்கு எப்படி இருக்கும்? . இவர் பாட்டுக்கு, சரி அவருக்கு அனுபவம் முடிந்து வரட்டும் என்று இவர் கிளம்பிவிட்டால்? இவர் கிளம்பியபின் அவர் பாடலை முடித்துவிட்டால் அருமையான பாசுரம் போய்விடும்! எனவே இவரும் சளைக்காமல் ஆறு மாதங்கள் பசி, தண்ணி இல்லாமல் கூடவே நின்றாராம். இது என்ன நிலை? இதை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் அதுதான் ஆழ்வார்கள் சொல்லும் இறை நிலை. கண்ணன் வெறும் கருத்து அல்ல. அவன் ஓர் அனுபவம். ஆறு மாதம் கழித்து அடுத்த வரி இப்படி வருகிறது….

எத்திறம், உரலினோடு இணைந்து இருந்தேங்கிய எளிவே!

சேர்த்து பார்த்தால்:

“பத்துடை அடியவர்க்கு எளியவன்; பிறர்களுக்கு அரிய வித்தகன்
 மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு
எத்திறம், உரலினோடு இணைந்து இருந்தேங்கிய எளிவே!”

(நம்மாழ்வார் திருவாய்மொழி 1-3-1).

அதாவது கண்ணன் பகவத் கீதை சொல்வதைவிட இவர்களுக்கு கண்ணன் எவ்வளவு காட்சிக்கு எளியவனாக, செளலப்பியனாக இருக்காறான் என்பதை நினைத்து மயங்குவதில்தான் இறை இன்பத்தை அனுபவித்து இருக்கிறார்கள் ஆழ்வார்கள்!

ஸ்ரீ நம்மாழ்வார் வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலம் – திருக்குருகூர்

ஸ்வாமி நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் கண்ணபிரான் திருவடிகளே சரணம்!

(Beautiful picture by Shri Keshav ji – From Krishna for Today)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *