திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – முதலாழ்வார்கள் வைபவம்

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் ஒருமுறை மிருகண்டு மகரிஷி ஆஸ்ரமத்தில் ஒருவர் மட்டுமே சயனித்துக் கொள்ளக் கூடிய அளவு மட்டுமே இடம் கொண்ட ஒரு சிறிய இடைகழியிலே சயனித்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழிந்த வாரே அவ்விடத்தே ஸ்ரீ பூதத்தாழ்வார் வந்து அங்கு தங்குவதற்கு இடம் வேணும் என்று கேட்க “இருவரும் இருக்கலாமே” என்று நினைத்து அவரை சேவித்து வரவேற்று எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களையும் பற்றி ஒருவருக்கொருவர் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கையில், அதே இடத்திற்கு ஸ்ரீ பேயாழ்வாரும் வந்து சேர்ந்தார்.

மூவர் நிற்கலாம் என்ற நோக்கத்துடன் ஸ்ரீ பொய்கையாரும், ஸ்ரீ பூதத்தாரும் ஸ்ரீ பேயாழ்வாரை வரவேற்று உபசரித்து மூவரும் சேர்ந்து எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களை நின்று கொண்டே ஒருவருக்கொருவர் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து நின்றனர்.

இப்படி மூவரும் நின்று கொண்டிருக்கையில் நான்காவதாக எம்பெருமானும் அவ்விடத்தே வந்து நெருக்கத் தொடங்கினானாம்!!!

“நம்மை நெருக்குபவர் யார்? பெருமாளோ!?” என்று மூவரும் திகைத்து நிற்கையில், முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கை ஆழ்வார்

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக – வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை – இடராழி நீங்குகவே”
என்று தொடங்கி முதல் திருவந்தாதியை மங்களாசாசனம் பண்ணினார்.

அதனை அடுத்து ஸ்ரீ பூதத்தாழ்வாரும்
“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக – இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு – ஞானத் தமிழ் புரிந்த நான்”
என்று தொடங்கி இரண்டாம் திருவந்தாதியைப் மங்களாசாசனம் பண்ணினார்.

இவர்கள் இருவரும் ஏற்றிய திருவிளக்காலே மன்னிய பேரிருளானது மாண்டு போக, திருக்கோவலூர் மாயனைக் கண்டு,

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – திகழும் அருக்கண் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் – என்னாழி வண்ணன் பால் இன்று”
என்று தொடங்கி மூன்றாம் திருவந்தாதி பாசுரங்களை ஸ்ரீ பேயாழ்வார் மங்களாசாசனம் பண்ணினார்.

பின்னர் மூவரும் திவ்யதேச யாத்திரைகள் சென்று, அந்திம காலத்தில் மீண்டும் திருக்கோவலூர் வந்து அடைந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்களாம்.

பொய்கையாழ்வார் – பூதத்தாழ்வார் – பேயாழ்வார் திருவடிகளே சரணம்.

thirukanden1

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *