கோவிந்தன் குணம் பாடி – கோதை தமிழில் கோவிந்தனின் குணங்கள் – பதிவு 4
லக்ஷ்மிபதியான எம்பெருமான், அனைத்து நற்குணங்களுக்கும் ஒரே இருப்பிடமாய், எல்லாக் கெட்ட குணங்களுக்கும் விரோதியாய், தேசம், காலம், வஸ்து இவைகளால் அளவில்லா ஜ்ஞானமும் ஆனந்தமுமான ஸ்வரூபத்தை உடையவன்.
ஸமஸ்த்த கல்யாண குணங்களுக்கு பரிபூரணனாக இருப்பவன் ஸ்ரீமந்நாராயணன்.
கோலச்சுரிசங்கு ஆகிய பாஞ்ச ஜன்யத்தை நோக்கி, மாயன் கண்ணபிரானுடைய சிவந்த திருஅதரத்தின் அதிசய குணத்தைச் சொல்லுமாறு கேட்கும் தன்மையுடையவள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்.
‘தேசமுன்னளந்தவன் திரிவிக்கிரமன்” என நாச்சியார் திருமொழியில் அருளிச்செய்தாள் ஸ்ரீ ஆண்டாள். அதாவது, ‘என்னைத் தீண்டவேணும்’ என்று ஒருவரும் விரும்பாதிருக்கத் தானே உலகங்களையெல்லாம் தீண்டியருளி, வாத்சல்யத்துடன் அனைத்து ஜீவ ராசிகளில் தலையிலும் தன்னுடைய திருவடி ஸ்பர்சம் கிடைக்குமாறு செய்தவன் திரிவிக்ரமன். நம்முடைய குற்றங்களைக் கண்டு தண்டிக்காமல் அதையே குணமாக ஏற்றுக் கொண்டு, குணாகுணம் நிரூபணம் பண்ணாதே சர்வ பிராணிகள் பக்கலிலும் திருவடிகளை வைத்த இந்த எம்பெருமானின் வாத்சல்ய கல்யாண குணம் சிறப்பு மிக்கது.
‘விண்ணுற நீண்டு அடிதாவிய மைந்தனை‘ என திருவிக்ரமனை போற்றிப் பாடுகிறாள் ஸ்ரீ ஆண்டாள்.
“வேங்கடவனைவிரும்பி“ என்றாவது “சங்கொடுசக்கரத்தானை விரும்பி“ என்றாவது “பவளவாயனைவிரும்பி“ என்றாவது அருளிச்செய்யாமல் “விண்ணுற நீண்டு அடிதாவிய மைந்தனை விரும்பி” என்று பாடுகிறாள். அதாவது திருவடியானது பரம ஆகாசத்தளவும் போய்ப்பொருந்தும் படியாக நெடுகவளர்ந்து உலகங்களை வியாபித்த மிடுக்கை யுடையனான எம்பெருமானுடைய குணங்களை நண்ணுவதற்கு உற்றவாசகமாலையாக நாச்சியார் திருமொழியை அருளிச்செய்தாள் ஸ்ரீ ஆண்டாள்.
‘ஓங்கி உலகளந்த உத்தமன்” என திருப்பாவையிலும் பாடி ஸ்ரீ ஆண்டாள் எம்பெருமானின் கல்யாண குணங்களை பறை சாற்றுகிறாள்.
“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி” – மஹாபலி சக்ரவர்த்தி வார்த்த நீர் கையில் விழுந்தவாறே ஆகாசத்தளவும் வளர்ந்து மூன்று உலகங்களையும் திருவடிகளாலே தாவி அளந்துகொண்ட புருஷோத்தமனுடைய திருநாமங்களை நாங்கள் பாடி – என்று பொருள்.
இங்கு, உத்தமன் என்றதற்குக் கருத்து யாதெனில், அதமாதமன், அதமன், மத்யமன், உத்தமன் என்று உலகில் நால்வகைப்பட்டிருப்பார்கள்;
1) பிறரை நலிந்து தன் வயிறு வளர்ப்பவன் அதமாதவன்;
2) பிறரும் வாழ்ந்தால் வாழட்டு மென்றிருப்பவன் அதமன்;
3) பிறரும் வாழ வேணும், நாமும் வாழவேணுமென்றிருப்பவன் மத்யமன்;
4) தான் கெட்டும் பிறரை வாழ்விக்குமவன் உத்தமன்!
எம்பெருமான் தன் வடிவைக் குறுகச் செய்வதும், பிறரிடம் சென்று இரப்பதுமாகிய கேடுகளைத் தான்அடைந்தும் இந்திரன் முதலிய தேவர்களை வாழ்வித்தமை பற்றி, இங்கு ‘உத்தமன்’ என்று பாடுகிறாள் ஸ்ரீ ஆண்டாள்!
ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி, பாடி நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்!
– அடியேன் ராமாநுஜ தாஸன் திருக்குருகூர் கண்ணன்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
