கோவிந்தன் குணம் பாடி – கோதை தமிழில் கோவிந்தனின் குணங்கள் – பதிவு 3
“மாலே மணிவண்ணா.. ” என்ற இந்த பாசுரத்தில் ஸ்ரீ ஆண்டாள் காண்பிப்பது எம்பெருமானின் மூன்று கல்யாண குணங்கள்.
1) மாலே – சௌலப்யம்.
2) மணிவண்ணா – சௌந்தர்யம்
3) ஆலின் இலையாய் – பரத்வம்.
மால் என்றால் திருமால். ‘மால்’ என்பதற்கு “மாலெனக் கருமை, பெருமை மையலுமாம்” என்று மூன்று விஷயங்களை நம் பூர்வார்சார்யர்கள் அருளிச்செய்வர்.
1) மால் = மையல் கொண்டவன், அன்பே வடிவானவன்.
ஆஸ்ரித வியாமோஹன். அதாவது ஆஸ்ரிதர்களுக்கு அதீத அன்பைப் பொழிபவன். அதாவது ‘கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய அன்பே’ – “எம்பெருமான் பிராட்டி பக்கலிலே அன்பையுடையவன், தம் பக்கலிலே அன்பே வடிவெடுத்தவனாயிருப்பவன்” என ஆழ்வார் சாதிப்பது போல அன்பே வடிவானவன்.
2) மால் = காளமேகம் போன்ற கருத்த நிறத்தனன்
“எழில் கொண்ட நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல, கார்வானம் காட்டும் கலந்து” – அதாவது “காளமேகம் போன்ற திருமேனியும் மின்னற்கொடி போன்ற பெரிய பிராட்டியாரோடு கூடிய எம்பெருமான் ” என ஆழ்வார் சாதிப்பது போல கருமை நிறத்தனன்.
3) மால் = பெருமை நிறைந்தவன்
“மன்னு பெரும்புகழ் மாதவன்” – அதாவது நித்யமாய் அளவில்லாத புகழையுடைய ச்ரிய: பதியான மாதவன்.
அளவிட முடியாத கல்யாண குணங்களை உடையவன்.
‘மணிவண்ணன்’ என்றால் நீலமேனி போன்ற நிறத்தையுடையவன்.
1) “ஒளி மணிவண்ணன் எங்கோ?” – அதாவது “ப்ராகாசமான மாணிக்கம்போன்ற வடிவையுடையவன் என்பேனோ? ” என்று நம்மாழ்வாரும்,
2) “திருமா மணிவண்ணன் செங்கண் மால் திருவடி சேரப்பெற்றதால் உஜ்ஜிவிக்கும் வகையறிந்தேன்” என்று பேயாழ்வாரும்
3) “மா மாயன் மணிவண்ணன்” – ஆச்சர்யச் செயல்களையுடையவனும் நீலமணி போன்ற திருநிறத்தை யுடையவனுமான கண்ணபிரான் என்று திருப்பாவை 16 ஆவது பாசுரத்தில் ஸ்ரீ ஆண்டாளும் எம்பெருமான் வடிவழகைச் சொல்லி பாடுகிறாள்.
வைகல் நாள்தொறும் வாய்க்கொள் வாசகமும் மணிவண்ணன் நாமங்களையே பாடி, மையல் கொண்டொழிந்த மால் அடியார் பக்கலில் வியாமோஹமுடைய எம்பெருமான் தொண்டர்களாகிய நாம் அவனையே ஆசைப்பட்டு, “அருள்வாய்!” என்று பிரார்த்தித்து ஆலிலைக் கண்ணனை ஸேவிப்போம்.
– அடியேன் இராமானுஜ தாஸன் திருக்குருகூர் கண்ணன்
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்