கோவிந்தன் குணம் பாடி
– கோதை தமிழில் கோவிந்தனின் குணங்கள் – பதிவு 2
இராமபிரான் இராவணனோடு போர்புரியும் போது அவன் மிகவும் எளிவரவு பட்டமையைக் கண்டு இரக்கமுற்று, “நிசாசரர் கோமானே! போரில் மிகவும் வருத்தமுற்றாய்; ஆதலால் இருப்பிடஞ்சென்று சிறிது தேற்றமடைந்து இன்று போய் நாளை வா” என்று நியமநம் தந்து தானே போகவிட்டு அருளினமை முதலிய பல குணங்களை உடையவன் ஸ்ரீ இராமபிரான்.
மனத்துக்கு இனியான்
ராமபிரானின் எண்ணற்ற கல்யாண குணங்களில் ‘வாத்ஸல்ய’ குணம் மிகவும் சிறப்பானது.
ஒருவன் *குன்றனைய குற்றம்* செய்து, அதவாது மலைபோல பல தவறுகளச் செய்து, பின்னர் *புறன் உரையே ஆயினும்* அதாவது அன்பில்லாமல் பாவனையாக வெறும் வார்த்தைகளாக எம்பெருமான் ராமனைப் பற்றிச் சொன்னாலும் அப்படிப்பட்டவனை ராமன் கைவிட மாட்டேன் என்றும் தன்னுடைய இந்த வார்த்தை எந்த க்ஷணத்திலும் எள்ளளவும் மாறாது என்றும் *கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்* சொன்ன சொல் ராமனின் வாத்ஸல்ய குணத்தை பறைசாற்றும். இந்த எம்பெருமானின் வாத்ஸல்ய கல்யாண குணத்தை அளவிடவே முடியாது.
( ப்ரமாணம்
1. *முதல் திருவந்தாதி* – குன்றனைய குற்றம் செய்யினும்… பாசுரம் 41
2. *நாச்சியார் திருமொழி* –முல்லைப் பிராட்டி..
3. *ராமாயண ஸ்லோகம்* – “மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந” )
“ராம ராம ராம ராம
ராம நாம தாரகம்
ராமகிருஷ்ண வாசுதேவ பக்தி முக்தி தாயகம்
ஜானகி மனோஹரம் ஸர்வலோக நாயகம்
சங்கராதி சேவ்யமான புண்யநாம கீர்த்தனம்”
என ஜானகியின் மனதைக் கவரும் புண்ய நாம கீர்த்தனமாகிய ராம நாமத்தை நாம் பாடுவோம். மனத்துக்கு இனியானைப் பாடுவோம். ராமன் ஒருபோதும் நம்மை கைவிட மாட்டான்.
ஜெய் ஸ்ரீராம்!
– அடியேன் ராமாநுஜ தாஸன் திருக்குருகூர் கண்ணன்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ ராமபிரான் திருவடிகளே சரணம்
