திருப்பாவை பாசுரம் 11 கற்றுக் கறவை


“பெண்ணே! நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?”

பாசுரம்
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம்ஒன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வபெண்டாட்டிநீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

திருப்பாவை பாசுரம் 11 பாடல் 

பாசுர விளக்கம்

இந்த பாசுரத்தில் மற்றொரு கோபிகையை எழுப்ப ஆண்டாள் கோபிகைகளுடன் சேர்ந்து செல்கிறாள். இந்த பெண் மிகுந்த செல்வம் படைத்த ஒரு கோபாலனின் பெண். இவர்கள் வீட்டில் கன்றுடன் கூடிய பசுக்கூட்டங்கள் நிறைய இருக்கிறதாம். பசுக்களை எண்ணி சொல்வதிருக்க இவர்கள் வீட்டில் பசுக்கூட்டங்களையே எண்ணிப்பார்க்க முடியாதாம். 

இந்த பெண்ணின் தகப்பனார் இவ்வளவு பசுக்கள் இருக்கிறதே என்று சிறிதும் ஆயாசப்படாமல், தமக்கு தேவையானது போக, மீதமுள்ள பசுக்களையும் அவைகள் மடியில் பால் கட்டி துன்பப்படாமல் இருப்பதற்காகப் பாலை கறந்து விடுவாராம்.

இளம் கன்றுகளை ஈன்ற பசுக்களை கறப்பவராகிய இவர் கண்ணனுக்கு எதிரிகளாயிருப்பவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று அவர்கள் பலத்தை அழித்து அவர்களை குன்றிப்போக செய்து விடுவாராம். “இத்தகைய குற்றமற்ற ஆயர்கள் குடியில் பிறந்த தங்கக்கொடி போன்ற பெண்ணே!” சொல்கிறாள் ஆண்டாள்.

“பாம்பின் படம் போன்ற இடைபெற்ற, மயில் போன்ற பெண்ணே! எழுந்து வா” என்கிறாள் ஆண்டாள் 

இவள் மெல்லிய இயல்பை உடையவள், கொழுகொம்பின்றி கொடி வாடியிருப்பது போலே கிருஷ்ணன் இல்லாமல் இவள் வாடுகிறாள். கிருஷ்ணனை அண்டியே உஜ்ஜீவனம் செய்யும் பரதந்த்ரை இவள் என்று உணர்த்துவதற்காக ஆண்டாள் சொல்கிறாள். 

அடுத்து, இந்த திருவாய்ப்பாடி முழுவதும் உள்ள கோபிகைகள் அனைவரும் பந்துக்கள் – பாகவத சம்பந்தம் உடையவர்கள்.

“அப்படி உன் சுற்றமான தோழிமார் எல்லாரும் உன் முற்றத்தில் வந்து நின்று முகில் வண்ணனான கண்ணனின் பெயரைப் பாடுகிறோம். உன் வீட்டு முற்றம் கண்ணனுக்கு உகப்பானது. அதனால் எங்களுக்கு வந்து அங்கே நின்று அவன் பேர்பாடுவதில் ஒரு ஆனந்தம். நாங்கள் இங்கே உரக்க அவன் பேரை பாடிக்கொண்டிருக்க, நீ அசையாமலும் பேசாமலும், செல்வம் நிறைந்த பிராட்டியாக இருக்கிறாயே! இது பாகவதர்களுக்கான லக்ஷணமா? உன் உறக்கத்திற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டு அவளை ஆண்டாள் எழுப்ப அவளும் எழுந்து மற்ற பாகவத பெண்பிள்ளைகளுடன் சேர்ந்தாள்.

 thiruppavai-pasuram11a

Thiruppavai Pasuram – 11
O Golden bower of the faultless Kovalar folk who milk many herds of cows, and battle victoriously in wars. O snake, slim waisted peacock damsel! Come join us. The neighborhood’s playmates have all gathered in your portico to sing the names of the cloud-hued Lord. You lie, not moving, not speaking. O wealth favoured girl, what sense does this make? Come quickly!

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

thiruppavai-pasuram11b

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *