வைகுண்டத்தில் ஜயன், விஜயன் என்னும் (துவார பாலகர்கள்) வாயிற்காப்பவர்கள் இருந்தனர். ஒருநாள், மிகச்சிறந்த யோகிகளான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகியோர் மகாவிஷ்ணுவையும், திருமகளையும் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஒரு துளியும் குற்றம், குறையோ, பாவ எண்ணங்களோ அற்றவர்கள். இவர்களை பிரம்மாவின் புத்திரர்கள் என்று கூறுவர். அத்தகைய மகா முனிவர்களை, இந்த துவாரபாலகர்கள் அவமதித்து பெருமாளைத் தரிசிக்க அனுப்பவில்லை.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, திருமகளுடன் தாமே நேரில் வந்து காட்சியளித்தனர். அதுமட்டுமில்லாமல், தன்னை அவமதித்தாலும் தன் அடியவர்களை அவமதிப்பதைப் பொறுக்காத, நம் பெருமான் அவர்கள் இருவரையும் மனிதர்களாகப் பிறக்க சாபம் அளித்துவிட்டார்.
உடனேப் பதறிப்போன, பாலகர்கள் தங்களால், இறைவனைப் பிரிந்து ஒருகாலும் இருக்க இயலாது என்று இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு கதறினர். கருணாமூர்த்தியான நம் இறைவனும் அவர்களுக்காக மனமிறங்கி, உங்களுக்கு நான் இரண்டு சந்தர்ப்பங்களைத் தருகிறேன். * நீங்கள் என் அடியவர்களாக ஏழு பிறவிகள் பிறந்து (சிலர் நூறு என்று கூறுகின்றனர்) அதன் பிறகு என்னை வந்து அடைகிறீர்களா? இல்லை, ** மூன்று பிறவிகள் என்னை எதிர்ப்பவர்களாக, கொடிய அசுரர்களாக இருந்து என்னை வந்து அடைகிறீர்களா? என்று வினவினார்.
அதற்கு, அந்த பாலகர்கள், எங்களால் நீண்ட காலம் தங்களைப் பிரிந்து இருக்க இயலாது, எனவே, தங்களை எதிர்ப்பவர்களாகப் பிறந்தாலும் விரைவில் தங்களிடம் வந்து சேர்ந்தால் போதும் இறைவா! என்று வேண்டினர். அதோடு இறைவனிடம், மேலுமொரு வரமும் வேண்டினர், அவர்களின் பிறப்புகளுடைய நிறைவு இறைவனால் அன்றி, வேறு எதனாலும் நிகழக்கூடாது என்று கேட்டனர். இறைவனும் அவ்வாறே திருவுளம் புரிந்தார்.
அந்த துவார பாலகர்கள்தான், கிருத (சத்திய) யுகத்தில் இரண்யாக்ஷ்ன் மற்றும் இரண்யகசிபுவாகவும், திரேதாயுகத்தில் இராவணன் மற்றும் கும்பகர்ணனாகவும், துவாபர யுகத்தில் சிசுபாலர் மற்றும் தந்தவக்ரனாகவும் பிறந்தனர்
ப்ரகலாதன் சரித்திரத்தில் ‘நான் நம்பும் என் நாராயணன் என்னைக் காப்பான்’ என நம்பினான், ப்ரகலாதன். “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என ப்ரகலாதன் உரைத்த பின்பு தன் பக்தனின் வாக்கிற்கேற்ப எங்கும் நிறைந்து கொண்டான். பிறகு அந்தியபோது, அதாவது பகலும் இரவும் அல்லாத பொழுதில், அரி உருவெடுத்து. சிங்கமாய் தோன்றி அரி-பகையை அழித்தான் அந்த ஹரி. தன்னையே கதியென முழுமையாக நம்பும் ஒருவனை காத்தான்.
“பந்தனைகள் தீர, அதாவது நம்மை அறியாமல் நம்மை பிணைத்திருக்கும் பல்வேறு உறவுமுறையோ, மற்றவையோ இவற்றிலிருந்து விடுபட வேண்டுமாயின் நாராயணனை சரணடைந்து. அவனே கதியென கொண்டு பல்லாண்டு பாடவேண்டும்” என்கிறார் பெரியாழ்வார்.
“எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழி வழியாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்று பாடுதுமே”
– பெரியாழ்வார் திருமொழி பாசுரம்.
“எந்தை தந்தை தந்தை தந்தைத்தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்”
– நான், என் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் பாட்டனார் தொடங்கி முதல் வந்த இந்த ஏழு தலைமுறைகளாக நாங்கள் வழிவழியாக வந்து இறைவனுக்கு திருத்தொண்டுகள் செய்கின்றோம்.
“திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை”
– திருவோணத் திருநாளன்று அந்தி மாலைப் பொழுதில் ஆளரி (ஆளரி – ஆள்+அரி, மனிதன்+சிங்கம்) வடிவில் திருவவதாரமெடுத்து இரண்யகசிபு என்னும் அசுரனை வதம் செய்தவனை பல்லாண்டு பாடுதும!
பக்தனை காக்கும் பொருட்டு ப்ரகலாதனுக்காக வெகுண்டு எழுந்த தன்னிகரில்லாதவன் நம் நாராயணன்.
ஓம் உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!
நமோ நாராயணா!
