காளிங்க நர்த்தனா கோவிந்தா!
கார்முகில் வர்ணா கோவிந்தா!
ஸ்ரீமத் பாகவத புராணம் – தசமஸ்கந்தம், 17 வது அத்யாயத்திலிருந்து:
பரீக்ஷித் ஸ்ரீ சுகப்ரம்மத்தைக் கேட்டார்
“காளிங்கனுக்கு, கருடனால் என்ன தீங்கு ஏற்பட்டது ?விரிவாகப் பதில் சொல்ல வேணும்”.
ஸ்ரீ சுகர் சொன்னார்:
ஒருமுறை கருடனுக்கும், சர்ப்பங்களுக்கும் விரோதம் ஏற்பட்டபோது, பிரும்மா தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்தி, அதன்படி ஒவ்வொரு அமாவாஸ்யை தினத்திலும், சர்ப்பங்கள் கருடனுக்கு உபசாரம் செய்து, அவன் பசியில்லாமல் இருக்க, ஆகாரம் கொடுத்து வந்தன. இதன்படி, சர்ப்பங்கள், கருடனால் கொல்லாமல் காக்கப்பட்டன. இந்த உபசர்ரங்கள் செய்வதற்கு வேண்டியவைகளை, சர்ப்பங்கள், தங்களுடைய பக்தர்களிடமிருந்து பெற்று வந்தன. இந்த ஏற்பாடு, பலகாலமாக நடந்து வந்தது.
கத்ருவின் பிள்ளையான காளிங்கன், திமிர் கொண்டு, கருடனுக்கு ஆகாரம் கொடுக்கவேண்டிய சமரசத் திட்டத்தை மீறி, அதை நிறுத்தி, எல்லாவற்றையும் தானே சாப்பிட்டு வந்தான். இதனால் கோபம் கொண்ட கருடன், காளிங்கனைத் தாக்கினான். கருடனால் தாக்கப்பட்ட காளிங்கன், உயிருக்குப் பயந்து, யமுனா நதி தீரத்தில் உள்ள இந்த மடுவில் வந்து ஒளிந்து கொண்டான். ஏன் இங்கு கருடன் வர இயலாது?
சௌபரி என்றொரு முனிவர், அகத்தையும் புறத்தையும் குளிர்விக்கும் அழகான மடுவில் தவம் இயற்றிக்கொண்டு இருந்தார். அதே நேரம், வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தான் கருடன். மடுவில் துள்ளிக் குதித்து நீந்தும் கயல்களைப் பிடிக்கத் தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தவன், சட்டென்று நீர்ப்பரப்பை நோக்கித் தாழப் பறந்துவந்தான். கயல் ஒன்றைத் தன் அலகால் பிடிக்கவும் செய்தான். தொடர்ந்து, படபடவென அவன் சிறகடித்து மேலெழும்ப முயற்சிக்க, அந்தச் சலனத்தில் சௌபரி முனிவரின் தவம் கலைந்தது. அதனால் அவர், கடுங் கோபம் கொண்டார். ‘இனி, இந்த மடு இருக்கும் பகுதிக்குக் கருடன் வரக்கூடாது; மீறி வந்தால், அழிவைச் சந்திப்பான்!’ என்று கருடனைச் சபித்தார்.
கருடனுக்குக் கிடைத்த சாபம் இன்னொரு வருக்கு வரமானது! ஆமாம்… கருடன் வராத அந்தப் பகுதி தனக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று கருதிய காளிங்கன், அந்த அழகிய மடுவுக்குள் குடிபுகுந்தது. அதனால், அந்த மடுவுக்கே ‘காளிங்க மடு’ என்று பெயர் கிடைத்தது. காளிங்கன், கருடன் வர இயலாத இந்த மடுவுக்குள் வந்து மறைந்து வாழலானான்.
ஒருநாள், யதுகுலச் சிறுவர்களோடு அங்கு விளையாட வந்த கண்ணனையும், மடுவில் இருந்து வெளிப்பட்டு சீறிப் பயமுறுத்தினான் காளிங்கன். பாம்பணையில் துயில்பவனாயிற்றே அந்த பாலகன். அவனா பயப்படுவான்? சற்றும் தாமதிக்காமல் கடம்ப மரத்தின் மேல் ஏறி மடுவுக்குள் குதித்தான் கண்ணன்.
(பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏறிய அந்தக் கடம்ப மரம் ஒன்று மட்டுமே அப்பகுதியில் பட்டுப் போகாமல் இருக்கிறது. பிருந்தாவனத்துக்குச் செல்பவர்கள் அந்த கடம்ப மரம் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் இருப்பதைக் காணலாம். )
☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆
அப்புறம் நிகழ்ந்ததுதான் நமக்குத் தெரியுமே! கண்ணன் காளிங்கனை அடக்கிய கதையைப் பெரிதும் சிலாகித்துச் சொல்லி வைத்திருக் கிறார்களே, நம் பெரியவர்கள்!!!
ஸ்ரீ கிருஷ்ணர், விஷப் பாம்பான காளிங்கனின் மீது நடனமாடினார். இதைக் கண்ட வானவர்கள், பூச்சொரிந்து, மத்தளங்கள் முழக்கி, குழல்களை இசைத்து, துதிகளையும் பாடல்களையும் பாடினார்கள். இவ்வாறாக வானுலக தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
அதிலும், நாகப் படத்தின் மேல் நின்று அவன் நர்த்தனம் ஆடிய அழகை பெரியாழ்வார் பாடுகிறார்:
“தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்து…”
கிருஷ்ணன் அவ்வளவு அழகாக நடனம் ஆடினானாம்! அற்புதம்!
கிருஷ்ணர் தன் தலைகளில் நடனமாடியபோது, காளிங்கன் அவரைத் தன் மற்ற தலைகளால் கீழே தள்ள முயற்சித்தான். காளிங்கனுக்கு நூறு தலைகள் இருந்தன. ஆனால் கிருஷ்ணர் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி, தன் காலால் அதன் தலைகளில் அடித்தபோது, காளிங்கனால் அந்த அடிகளைத் தாங்கி கொள்ள முடியவில்லை.
அப்போது, காளிங்கனின் மனைவிகளான நாகபத்தினிகள், கிருஷ்ணர் தம் கணவனை உதைத்து அடக்குவதைக் கண்டனர். அவர்கள் கிருஷ்ணரைச் சரண் அடைந்து, தம் கணவனான காளிங்கனை தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு பிரார்த்தித்தனர். கிருஷ்ணர் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, காளிங்கனை மனைவி பிள்ளைகளுடன் சமுத்திரத்திற்குப் போய்விடுமாறும், யமுனையின் நீரை அசுத்தப் படுத்த வேண்டாமெனவும், பசுக்களும் சிறுவர்களும் அந்நீரைப் பருகுவதில் தடை ஏற்படக்கூடாதெனவும் கட்டளை இட்டார். காளிங்கனும் அவனது மனைவி பிள்ளைகளும் அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்றனர்.
அப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நானும் என் நண்பர்களும் நீராடிய காளிங்க ஏரியில் ஒருவர் நீராடினாலும், ஒரு நாள் உபவாசமிருந்து அந்நீரால் மூதாதையருக்கு சிரார்த்தம் கொடுத்தாலும் அவரின் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்று கூறினார்.
SIR
VERY NICE & USEFUL INFORMATION IN TAMIL THANK YOU