பெரியாழ்வார் மனத்தில் கோயில் கொண்ட கோவிந்தன்
“சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய்
உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என்னுடைமையையும் உன் சக்கரப் பொறியொற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே”
– பெரியாழ்வார் திருமொழி 5-4-1
பெரியாழ்வாருக்கும் வேங்கடவனுக்கும் நடந்த உரையாடல்:
பெரியாழ்வார்: “தாமோதரனே! எனது ஆத்மாவுக்கும், என் உடைமையான சரீரத்திற்கும் உன்னுடைய ஸுதர்சனாழ்வானுடைய திருவிலச்சினையை இடுவித்து உன்னுடைய கருணையே புரிந்திருந்தேன். இனி நான் செய்ய வேண்டுவதொன்றில்லை! இப்போது உன்னுடைய திருவுள்ளக்கருத்து என்னவோ?” என்று கேட்க,
வேங்கடவன்: அதற்கு எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி , “ஆழ்வீர்! நீர், எல்லாம் பெற்றீரோ? உம்மை நெடுநாளாகப் பற்றிக்கிடக்கிற கர்மங்கள் கிடக்கின்றவே? ப்ராப்திக்கு உறுப்பான பரமபக்தி பிறக்கவில்லையே?” என்று சொல்ல..
பெரியாழ்வார்: “புருஷோத்தமனே! நீ என்னை ஆட்கொண்ட பின், ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும் வற்றிப்போனது. பாவங்கள் அனைத்தும் நெருப்புப்பட்டு வெந்திட்டது. என் கைங்கர்யங்கள் அனைத்தும் உனக்கே என்று இருக்கும். என்னை திருநாட்டுக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போவதற்கன்றோ பெரிய திருவடியின் மேலேறிக்கொண்டு வந்துள்ளாய்?!” என்று கேட்க..
வேங்கடவன்: “ஆழ்வாரே! நீரொருவர் மாத்திரம் பேறுபெற்றால் அது என்னாகும்? உம்மோடு ஸம்பந்தமுடையார்க்கும் விரோதி கழிந்தலாலன்றோ? நீர் பேறு பெற்றீராவது?” என்று பதிலுரைக்க..
அதற்கு ஆழ்வார், “என் நாயகனே! நான் உன்னுடைய பொருளாக வாய்ந்தபின்பு என்னைப்போல் நன்மைபெற்றார் இவ்வுலகில் யாரேனுமுண்டோ? என்னுடைய விரோதிகள் கழிந்ததன்றி என்னோடு ஸம்பந்தம் பெற்றாருடைய விரோதிகள் கழிந்தது மன்றி, இந்நாட்டிலுள்ள அனைவருடைய விரோதிகளுமன்றோ கழிந்தன; இதற்கு மேற்படவும் ஒரு நன்மையுண்டோ?” என்று சொல்ல,
வேங்கடவன் புன்முறுவலுடன் ஆழ்வாரை ரக்ஷிக்கிறார்.
பெரியாழ்வார் இருகை கூப்பி, “பெருமானே! நீ உன் இருப்பிடங்களான திருவேங்கடத்தையும், வைகுண்டத்தையும், துவாரகையையும் விட்டு விட்டு , என்னிடம் விருப்பம் கொண்டு, என் மனதையே நீ நித்யவாசம் செய்வதற்கு ஏற்ற இருப்பிடமாகக் கொண்டாயே! என்ன பாக்கியம்!” என்று அக மகிழ்கிறார்.
“வடதடமும் வைகுந்தமும் மதிள்துவராபதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே!”
(பெரியாழ்வார் திருமொழி – சென்னியோங்கு பதிகம், 5.4.10) என்று அருளிச்செய்து, தனது பிரபந்தத்தை நிறைவு செய்கிறார் ஸ்ரீ பெரியாழ்வார்.
( ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமி சாதித்த உரையிலிருந்து )
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!

Wonderful swami. Easy to understand and enjoy the meaning. Srimathe Ramanujaya namaha.