திருப்பல்லாண்டு 4


ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:

திருப்பல்லாண்டு தனியன் 1: (நாதமுனிகள் அருளிச்செய்தது)
குருமுக மனதீத்ய ப்ராஹ வேதாநஷேஷான்
நரபதி பரிக்லுப்தம் ஷுல்கமாதாதுகாம:
ச்வஷுரமமரவந்த்யம் ரங்கநாதச்ய ஸாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி

விளக்கம்:
ஒரு ஆசார்யனின் திருமுகமாக சிறிதும் வித்யாப்யாசம் இல்லாமல், பாண்டிய மன்னனான வல்லபதேவனின் சபையிலே எம்பெருமானின் இயற்கையான இன்னருளினால் பகவத் பரத்வத்தை நிலைநாட்டுவதர்க்காக சகல வேதார்த்தங்களையும் எடுத்துரைத்தவரும், பொற்கிழியைப் பரிசாக வென்றவரும், தேவர்களாலும் வணங்கப் படுபவரும், ஸ்ரீ ரங்கநாதனுக்கு மாமனாரும், பிராமண குல திலகருமான அப்பெரியாழ்வாரை வணங்குகிறேன்.

திருப்பல்லாண்டு தனியன் 2 (பாண்டிய பட்டர் அருளிச்செய்தவை)

மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால்*
சொன்னார் கழற் கமலம் சூடினோம்* முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம்* கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.

விளக்கம்:

மதிலாலே சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் என்று ஒரு முறை சொன்னவருடைய திருவடித்தாமரைகளை சிரமேற்கொண்டோம். புருஷாகாரம் வெளியாகாத காலத்திலே பர தத்வ நிர்ணயம் பண்ணி பொற்கிழியை அருத்தருளினார் என்று சொல்லப்பெற்றோம்; ஒ நெஞ்சே அதோகதியான நரகத்தில் சேருகைக்கு உண்டான வழியை அறுத்தோம்(அறப்பண்ணினோம்).

Once, the king of Madurai named Vallabha Deva, could not choose his faith from the various paths offered by different religions.
The king tied a big bag of gold coins to a long vertical pole and announced in the contest that the booty will go to the scholar who can bring it down with his faith. For many days, number of scholars tried in vain to do this with their scholarly works, eloquent speeches and heated debates. One night the Lord appeared in Vishnuchitta’s dream and asked him to go to the king’s court and win the contest. Vishnuchitta woke up in the morning and proceeded to the king’s palace according to the Lord’s directive. However he was well aware of his limitations, as he had never shown any interest in scriptural learning. He was confident that the Lord’s will always prevails.
In the King’s court, he proceeded to talk on ‘Sriman Narayana’ as the ultimate reality. The words started flowing as a torrent as he went on quoting the Vedas, the Upanishads and the Puranas. Selva Nambi, the king and the entire gathering were thrilled to the core by his conviction in his faith and were astounded to see the bag of coins fall on its own accord into Vishnuchitta’s palms. The whole court acknowledged that Vishnuchitta had the special grace of the Lord. The king honoured him with the title “Bhattar Piran”.

Periyazhwar2

திருப்பல்லாண்டு தனியன் 3

பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று*
ஈண்டிய சங்கம் எடுத்தூத* வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்*
பாதங்கள் யாமுடைய பற்று*

விளக்கம்:

பாண்டிய மன்னனான வல்லபதேவன் பிராமணர்களுக்கு உபகாரகரான ஸ்ரீ பெரியாழ்வார் எழுந்தருளுகிறார் என்பதை எல்லோரும் அறியும் படியாக திரள் திரளான சங்குகளை பலர் மூலமாக ஊத, வித்யாப்யாசம் சிறுதும் இல்லாமலே வேத வேதாந்த பிராமணங்களை சபையிலே எடுத்துக்காட்டி பொற்கிழியை அறுத்தருளின ஸ்ரீ பெரியாழ்வாருடைய திருவடிகளே நமக்கு புகலிடம் என்பதை உணர்த்தும் தனியன் ஆகும்.

The above pasura brings how the Azhwar was called Bhattar Piran. That evening, the king took Vishnuchitta on a ceremonial parade around the city on his elephant. Sriman Narayana, delighted to see all these honours being showered on the Azhwar, appeared in the sky on His Garuda Vahanam with Sri Mahalakshmi. Vishnuchitta was dazed to see the splendour of the Lord and since he always enjoyed Krishna as a child, blessed the Lord with a long life imagining himself as the Lord’s mother and sang his “Thiru Pallandu” pasuram. He came to be called “Periyazhwar” as he thought of himself as elder to the Lord Himself to bless Him.

perumal-garudan-periyazhwar

திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்த பாசுரம் + அர்த்தம்:

முதல் பாசுரம்: (To be recited 2 times)

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வி திருக்காப்பு*

விளக்கம்:

பாண்டியராஜனுடைய பண்டித சபையிலே பரதத்வ நிர்ணயம் பண்ணின பெரியாழ்வாருக்கு யானையின் மேலே மகோத்சவம் செய்வித்த போது, எம்பெருமான் தானும் அதைக் கண்டு ஆனந்திப்பதற்க்காக, கருடாரூடனாக எழுந்தருளி சேவை சாதிக்க, ஆழ்வாரும் எம்பெருமானைக் கண்டு சேவித்து, “ஜய விஜயீ பவ” என்று சொல்லுமாப்போலே அசுர ராக்ஷஸ மயமாய் இருக்கும் இந்த நிலத்திலே எம்பெருமானுக்கு ஒரு அமங்கலமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைத்து எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுகிறார்.

எம்பெருமானும் தானும் ஐயோ! ஏன் நம்மைப் பார்த்து இப்படி பயப்படுகிறார் ஆழ்வார், எதிரிகளை ஒரு விரல் நுனியாலே வெல்லவல்ல தேஹவலிவு நமக்கு உண்டு என்பதை ஆழ்வார் அறிகிறார் இல்லை போலும்; அதைக் காட்டினால் இவருடைய அச்சம் துலைந்துவிடும் என்று நினைத்து, கம்சனால் ஏவப்பட்ட மல்லர்களைக் கொன்ற புஜபலத்தைக் காட்டினான் எம்பெருமான். இப்படி புஜபலத்தைக் காட்டினது ஆழ்வாரின் அச்சம் தணிவதற்காக ஆகும், ஆனால் ஆழ்வாருக்கோ மேலும் அச்சம் பெருகிப்போக, மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா என்று மீண்டும் பல்லாண்டு பாடுகிறார். இங்கே ஆழ்வாருக்கு ஏற்பட்ட அச்சம் எப்படியாபட்டது என்றால், ஒரு தாயானவள் தன் மகன் சூரனாய் இருப்பினும் அவன் யார் சொல்லியும் கேட்காமல் யுத்தம் செய்யப் போய்விடுவானே – யாராலே என்ன கெடுதி நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதைப் போன்று ஆகும் என்று பூருவர்கள் நமக்கு புரியும் படியாக அருளியது மிகவும் சிறப்பாகும்.

இரண்டாம் பாசுரம்:

அடியோமோடும் நின்னோடும்* பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு*
வடிவாய் நின் வலமார்பினில்* வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும்* சுடராழியும் பல்லாண்டு*
படிப்போர் புக்கு முழங்கும்* அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே*

இரண்டாம் பாசுர விளக்கம்:

சேதனர்களாகிய அடியோங்களுடனும் சர்வ சேஷியான தேவரீரோடும் இருக்கும் சம்பந்தம் நெடு நாள் அளவும் நித்தியமாய் இருக்க வேணும். அடுத்து எம்பெருமானின் வலது திருமார்பில் பெரிய பிராட்டியார் தொடக்கமாயுள்ள நாய்ச்சிமார்களுக்கு பல்லாண்டு பாடுகிறார். பிறகு எம்பெருமானின் வலத்திருக்கையில் இருப்பவனும், பகைவரை எரிக்குமவனுமாகிய திருவாழி ஆழ்வானுக்கு பல்லாண்டு பாடுகிறார்; யுத்த களத்திலே முழங்கப் படுகிற அளவற்ற பெருமையை உடைய ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானுக்கும் பல்லாண்டு பாடுகிறார் இந்த பாசுரத்திலே.

அடியோமோடும் என்னும் சொல்லானது பன்மையைக் குறிக்கும் – அடியோம் என்று குறிப்பிடப்படுவது ஜீவாத்மாக்களை ஆகும். நின்னோடும் என்ற சொல் எம்பெருமானை குறிக்கும்.

முதல் வரியாலே அடியோமோடும் என்று இந்த லீலா விபூதியிலுள்ள தங்களையும், அடுத்த மூன்று வரிகளாலே நித்ய விபூதியிலுள்ள பெரிய பிராட்டியார் முதலியவர்களை இந்த பாசுரத்திலே ஆழ்வார் காட்டியிருப்பதால் உபயவிபூதியிலுமுள்ள எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடினார் என்பது பூருவர்களின் திருவாக்கு ஆகும். முதல் இரண்டு பாசுரங்களை சேர்ந்தே அனுசந்திப்பது வழக்கமாகும்.

முதல் இரண்டு பாசுரங்களை சேர்ந்தே அனுசந்திப்பது என்பது பூருவர்கள் காட்டின வழியாகும். இன்றளவும் ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் திருமாளிகைகளிலும், திருக்கோவில்களிலும் இந்தக் க்ரமத்திலே அனுசந்திப்பர். மேலே வரும் பாசுரங்களில் ஆழ்வார் ஒரு அதிகாரியிடம் இருந்து பல காலம் சிஷ்யனாய் இருந்து தெரிந்து கொள்ளவேண்டிய மூன்று எழுத்துக்களின் அர்த்தங்களை வெகு அழகாக, எல்லோருக்கும் புரியும் படியாக பாசுரங்களை அருளிச் செய்த கிரமத்தை அனுபவிப்போம்.

மூன்றாம் பாசுரம்:

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்* வந்து மண்ணும் மணமும் கொண்மின்*
கூழாட்பட்டு நின்றீர்களை* எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்*
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்* இராக்கதர் வாழ்* இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப்* பல்லாண்டு கூறுதுமே*

பாசுர விளக்கம்:

ஆழ்வார் தனிமையிலே எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணுவதில் திருப்தி இல்லாமலும், மிகவும் போக்யமான வஸ்துவை தனித்து அனுபவிப்பது தகாது என்ற நியாயமான காரணத்தாலும் இந்த பல்லாண்டு பாடும் கைங்கர்யத்திலே எல்லோரையும் ஈடுபடுத்த திருவுள்ளம் கொண்ட ஆழ்வார், உலகத்திலே உள்ள மூன்று விதமான அதிகாரிகளான செல்வத்தை விரும்புபவர்(இழந்த செல்வத்தை தேடுபவர்களும் அடக்கம்), ஆத்மானுபவத்தை விரும்புபவர், பகவத் அனுபவத்திலே ஈடுபடுவோர் ஆகிய எல்லோரையும் அழைப்பதாக அமைந்த பாசுரங்கள் ஆகும் இவை அனைத்தும். மேலே அழைக்கப்பட்ட முதல் இரண்டு அதிகாரிகளும் அல்பப் பயன்களுக்காக இப்படி எம்பெருமானைப் பணிந்து வழிபடுகிறார்களே என்று சற்று யோசித்த ஆழ்வார், அவர்களையும் திருத்திப் பணிகொள்ள வேண்டும் என்று நிச்சயித்து அவர்களையும் மங்களாசாசனத்துக்கு அழைக்க திருவுள்ளம் கொண்டு, முதலிலே பகவத் அனுபவத்திலே ஈடுபடும் அதிகாரிகளை பல்லாண்டு பாட அழைக்கிறார் இந்த மூன்றாம் பாசுரத்தாலே.

எம்பெருமானின் திருவடிகளில் கைங்கர்யம் செய்து உஜ்ஜீவனம் அடைய விருப்பம் உள்ளவர்களாகில், நீங்கள் எங்களுடன் சேர்ந்து எம்பெருமானுடைய உத்சவத்துக்கு அபிமானிகளாகவும், புழுதிமண் சுமப்பவர்களாயும் இருங்கள்; (கூழாட்பட்டு) சோற்றுக்காக பிறரிடத்தில் அடிமைப் பட்டு இருப்பவர்களை இந்த கோஷ்டியிலே சேர்க்கமாட்டோம். நாங்களோ ஏழு தலைமுறையாக குற்றம் இல்லாதவர்களாயும், ராக்ஷசர் வசிக்கிற இலங்கையில், வானரப் படைகளைக் கொண்டு யாவரும் அழிந்து போகும்படி போர் செய்த எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுபவர்களாயும் இருக்கின்றோம் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இந்த பாசுரத்திலே.

நான்காம் பாசுரம்:

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து* எங்கள் குழாம் புகுந்து*
கூடு மனமுடையீர்கள் வரம்பொழி* வந்தொல்லைக் கூடுமினோ*
நாடும் நகரமும் நன்கறிய* நமோ நாராயணாய என்று*
பாடு மனமுடைப் பத்தருள்ளீர்* வந்து பல்லாண்டு கூறுமினே*

பாசுர விளக்கம்:

இங்கே ஏடு நிலம் என்ற சொல்லுக்கு பொல்லாத ஸ்தானம் என்பது பதப்பொருள் என்று பெரியோர் கூறுவார். இந்த பாசுரத்திலே கைவல்யார்த்திகளை, அனன்யப்பிரயோஜனர்களான தன்னுடைய கோஷ்டியிலே சேருவதற்காக அழைக்கப்படுகிறார்கள்.

கைவல்ய அனுபவத்திலே இருப்பவர்களே, சூக்ஷ்ம சரீரமானது தனக்குக் காரணமான மூலப் பிரக்ருதியிலே லயிப்பதற்கு முன்னமே, ஆத்மானுபவம் மட்டுமே பண்ணுவோம் என்று நீங்கள் வைத்துக் கொண்டிருக்கும் வரம்பை ஒழித்து, நீங்கள் எங்களோடு சேர்ந்து விட வேணும். அப்படிச் சேர்ந்த பின்பு நீங்கள் எங்களோடு சேர்ந்து விட்டீர்கள் என்பதை நாடும் நகரும் நன்கு அறிய திருமந்திரத்தைச் சொல்லி – (பாடு மனமுடைய பத்தர் கோஷ்டி) பாடவேணும் என்ற எண்ணத்தை உடைய பக்தர்களுக்குள் சேர்ந்தவர்களாய் இருந்து எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுங்கள் என்று அழைக்கிறார் ஸ்ரீ பெரியாழ்வார்.

ஐந்தாம் பாசுரம்:

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி* அசுரர் இராக்கதரை*
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த* இருடீகேசன் தனக்கு*
தொண்டைக் குலத்தில் உள்ளீர்* வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி* பண்டைக் குலத்தைத் தவிர்ந்து* பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே*

பாசுர விளக்கம்:

இந்த பாசுரத்திலே ஐஸ்வர்யார்த்திகளை பல்லாண்டு பாட அழைக்கிறார் ஆழ்வார். இதிலே இரண்டு வகுப்பினர் உண்டு. ஒருவர் புதிதாக செல்வத்தைப் பெற விரும்புவோர்(அண்டக்குலத்துக்கு அதிபதியான இருடீகேசனுக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்). மற்றொருவர் இழந்த செல்வத்தை தேடுபவர்(அசுரர் இராக்கதரை இண்டைக்குலத்தை எடுத்துக்களைந்த இருடீகேசனுக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்).

ஐஸ்வர்யார்த்திகளே – உங்களுடைய பழைய தன்மையை விட்டு(பிரயோஜநாந்தரம்) எங்களோடு சேர்ந்து அண்ட சமூகங்களுக்கெல்லாம் நியாமகனும், அசுர ராக்ஷஷர்களுடைய கூட்டத்தை நிர்மூலமாக்கினவனுமான பகவானுடைய திருவடிகளை சேவித்து, ஆயிரம் திருநாமங்களையும் அனுசந்தித்து மங்களாசாசனம் பண்ணுங்கள் என்று அழைப்பதாக அமைந்த பாசுரம் ஆகும்.

ஆறாம் பாசுரம்:

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்* ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்* திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரி உருவாகி* அரியை அழித்தவனை*
பந்தனைத் தீரப் பல்லாண்டு* பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே*

பாசுர விளக்கம்:

வாழாட்பட்டு என்று தொடங்கும் மூன்றாம் பாசுரத்திலே ஏழாட்காலும் பழிப்பிலோம் நங்கள் என்று தங்கள் பெருமையைச் சொல்லி அனன்யப் பிரயோஜனர்களை அழைத்தார் அன்றோ. இந்த பாசுரத்திலே அப்படி அழைக்கப் பட்ட அனன்யப் பிரயோஜனர்கள் நாங்களும் உம்மைப் போலவே ஏழு தலைமுறையாக அடிமை செய்து எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணுகிறவர்கள் என்று சொல்லி கொண்டு வந்து சேர்ந்ததாக அமைந்த பாசுரம் ஆகும்.

என் பிதாவும், அவர் பிதாவும், அவர் பிதாவும், அவர் பிதாவும், அவருடைய பாட்டனுமாக ஏழு தலைமுறையாக முறை தவறாமல் கைங்கர்யம் பண்ணுகிறோம். திருவோண நன்னாளிலே அழகிய சாயம் சந்தியா காலத்திலே ந்ருசிம்ஹப் பெருமானாகத் தோன்றி, பக்தப் பிரஹ்லாதனின் பகைவனான இரணியனைக் கொன்ற எம்பெருமானுக்கு மங்களாசாசனம் என்பதாக அமைந்த பாசுரம் ஆகும்.

ஏழாம் பாசுரம்:

தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி* திகழ் திருச் சக்கரத்தின்*
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று* குடி குடி ஆட்செய்கின்றோம்*
மாயப் பொருபடை வாணனை* ஆயிரம் தோளும் பொழி குருதி பாய*
சுழற்றிய ஆழி வல்லானுக்குப்* பல்லாண்டு கூறுதுமே*

பாசுர விளக்கம்:

ஏடு நிலத்தில் என்ற பாசுரத்தில் கைவல்யார்த்திகளை அழைத்து, நாடு நகரமும் நன்கு அறிய நீங்கள் வர வேணும் என்று தெரிவித்தாரன்றோ. அவர்களும் அப்படியே வர திருவுள்ளம் கொண்டவர்களாய், பஞ்ச சம்ஸ்காரம் பண்ணிக்கொண்டு, எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணுபவர்களாய் ஆகிவிட்டோம் என்று எல்லோரும் அறியும் படி சொல்லிக்கொண்டு வந்த பாசுரம் இப்பாசுரமாகும்.

சந்திர சூர்யர்களைக் காட்டிலும் மிகவும் பிரகாசமாக இருப்பவனும், சிவந்த ஒளியோடு கூடி விளங்குபவனுமான ஸ்ரீ சக்கரத்தாழ்வானின் வட்ட வடிவத்தினால் அடையாளம் செய்யப் பட்டவர்களாய், பல காலமாக எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து வருகிறோம். பாணாசுரனுடைய ஆயிரம் தோள்களிலிருந்தும் இரத்தம் வெள்ளமாகப் பாய்ந்தோடும் படி செய்த ஸ்ரீ சக்ராயுதத்தை ஆளவல்ல எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்வோம்.

எட்டாம் பாசுரம்:

நெய்யிடை நல்லதோர் சோறும்* நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு* காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து* என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல*
பையுடை நாகப் பகை கொடியானுக்குப்* பல்லாண்டு கூறுவனே*

பாசுர விளக்கம்:

இந்த பாசுரம் மிகவும் சிறப்பான பாசுரம் ஆகும். இந்த இருள்தருமா ஞாலத்திலே ஐஸ்வர்யார்த்திகளே நிறைய உள்ளனர். அண்டக்குலத்துக்கு என்று தொடங்கின பாசுரத்திலே ஐஸ்வர்யார்த்திகளை அழைத்தார்.அவர்கள் எல்லோரும் திருந்தி வந்தமையை சொல்லும் பாசுரம் இது.

நெய்யோடு கூடின பிரசாதத்தையும், சேவன வ்ருத்தியையும், தாம்பூலத்தையும், கழுத்துக்கு உண்டான ஆபரணங்களையும், காதுக்கு உண்டான குண்டலத்தையும், உடம்பில் பூசிக்கொள்ளும் சந்தனத்தையும் மற்றும் ரஜஸ் தமோ குணங்களால் நான் விரும்பின அனைத்தையும் கொடுத்து, சம்சாரியாய் கிடந்த என்னை சாத்விகனாக(ஐஸ்வர்யம் தியாஜ்யம், பகவத் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்) ஆக்கின, கருடனைக் கொடியாகக் கொண்ட எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவேன்.

ஒன்பதாம் பாசுரம்:

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை* உடுத்துக் கலத்ததுண்டு*
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன* சூடும் இத்தொண்டர்களோம்*
விடுத்த திசை கருமம் திருத்தித்* திருவோணத் திருவிழவில்*
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப்* பல்லாண்டு கூறுதுமே*

பாசுர விளக்கம்:

அனன்யப்பிரயோஜனர்கள் எம்பெருமானை நோக்கிப் பல்லாண்டு பாடுவதாக அமைந்த பாசுரம் ஆகும். தேவரீர் உடுத்துக் களைந்த பீதாம்பரத்தை உடுத்துக் கொண்டும், தேவரீர் அமுது செய்து மிகுந்திருப்பதை உண்டும், தேவரீர் சூடிக் களைந்த திருத்துழாய் மாலைகளை சூடியும் வாழும் தாசர்களான அடியோம், தேவரீர் ஏவி அனுப்பிய திசைகளில் முறையாக காரியங்களைச் செய்து பாம்பாகிய படுக்கையிலே சயனத்திருக்கிற தேவரீருக்கு ஸ்ரவண நன்னாளிலே பல்லாண்டு பாடுவோம்.

பத்தாம் பாசுரம்:

எந்நாள் எம்பெருமான்* உந்தனக்கு அடியோம் என்று எழுத்தப்பட்ட அந்நாளே*
அடியோங்கள் அடிக்குடில்* வீடு பெற்று உய்ந்தது காண்*
செந்நாள் தோற்றித்* திருமதுரையுள் சிலை குனித்து*
ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே* உன்னைப் பல்லாண்டு கூறுதுமே*

பாசுர விளக்கம்:

கைவல்யார்த்திகள் எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணுவதாக அமைந்த பாசுரம் ஆகும்.
சுவாமி தேவரீருக்கு நாங்கள் அடிமைப் பட்டவர்கள் என்று அறிந்து கொண்டோமோ, அந்த தினம் முதல் அடியோங்களுடைய சந்தானமெல்லாம் உஜ்ஜீவித்துவிட்டது. நல்ல திருநாளிலே அவதாரம் பண்ணி, கம்சனுடைய யாக சாலையில் புகுந்து வில்லை வளைத்து முறித்து, காளிய நாகத்தின் தலைமேல் குதித்த தேவரீருக்கு மங்களாசாசனம் செய்வோம்.

பதினோராம் பாசுரம்:

அல்வழக்கு ஒன்றும் இல்லா* அணிகோட்டியர்கோன்*
அபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே* நானும் உனக்கு பழவடியேன்*
நல்வகையால் நமோ நாராயணா என்று* நாமம் பல பரவி*
பல்வகையாலும் பவித்திரனே* உன்னைப் பல்லாண்டு கூறுவனே*

பாசுர விளக்கம்:

ஐஸ்வர்யார்த்திகள் எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவதாக அமைந்த பாசுரம் ஆகும். எம்பெருமானே!அநீதிகளே இல்லாத அழகான திருக்கோட்டியுரிலே வாழ்பவரான செல்வநம்பியைப் போல பழமையான தாசனாக ஆகிவிட்டேன். பரிசுத்தனான எம்பெருமானே அடியேனுக்கு நன்மை உண்டாகும் படி திருமந்திரத்தைச் சொல்லி, தேவரீரின் பல ஆயிர திருநாமங்களைக் கொண்டு தேவரீருக்கு மங்களாசாசனம் செய்வேன் என்று கூறுவதாக அமைந்த பாசுரம் ஆகும்.

பன்னிரண்டாம் பாசுரம்: (Recite 2 times)

பல்லாண்டென்று பவித்திரனை* பரமேட்டியை* சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை* வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்*
நல்லாண்டென்று நவின்றுரைப்பார்* நமோ நாராயணாய என்று*
பல்லாண்டும் பரமாத்மனைச்*சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே*

பாசுர விளக்கம்:

பரிசுத்தமானவனும், பரமபதத்திலே வாசம் செய்பவனும், பஞ்ச ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானை  ஸ்ரீவில்லிபுத்தூரிலே பிறந்த ஸ்ரீ பெரியாழ்வார் பொங்கும் பரிவாலே பாடின இந்த பிரபந்தத்தை, இம்மையிலே பாடுகிறவர்கள், மறுமையிலே ஸ்ரீமந் நாராயணனை சுற்றும் சூழ்ந்து கொண்டு “நமோ நாராயணா” என்று எப்போதும் மங்களாசாசனம் பண்ணும் பாக்கியம் பெறுவார்கள் என்று இப்பிரபந்தத்தை அனுசந்திப்பவர்களுடைய பலனையும் கூறி முடிவு பெறுகிறது இந்த ப்ரபந்தம்.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!

Sri Periyazhwar is the Avatar of Lord Vishnu’s divine vehicle ‘Garuda’.

Periyazhwar1

 


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

4 thoughts on “திருப்பல்லாண்டு