ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் 4
“பொழுது புலர்ந்தது நீயும் கண்மலராய்! கருமணிக் குட்டனே! தொழுதேன் உன் திருவடியை, நீ பல்லாண்டு வாழ்க” என்று பாடி கண்ணனை எழுப்பினாள் யசோதை.
துயில் நீங்கி எழுந்து விளையாடுகின்றான் குழந்தை கிருஷ்ணன். அவன் வளரும் ஆயர்பாடியில் எல்லாருக்கும் அவன் மீது கொள்ளைப் பிரியம். பாலையும் தயிரையும் வெண்ணையையு ம் அவன் இஷ்டப்படி எல்லார் வீடுகளிலும் புகுந்து தின்று மகிழ்கிறான்.
தெருவில் ஒரு அழகுக் காட்சி காண்பவரை மெய்மறக்க வைக்கின்றது. இடைப் பெண் ஒருத்தி தெருவில் தயிர், பால் இவற்றைப் பானையில் நிரப்பிக் கொண்டு விற்கச் செல்கின்றாள்.
வியாபாரத்தில் கருத்தில்லை – அவளுடைய எண்ணம் எல்லாம் அந்த மாதவனின், மணிவண்ணனின், கிருஷ்ணனின் திருவடிகளில் பதிந்து இருக்கிறது. நேற்று அவளுடைய குடிலில் புகுந்து கோபாலன் தயிர் வெண்ணை திருடித் தின்றானாம்.
அந்த நினைப்பில், “தயிரோ தயிர், தயிர் வாங்கலையோ? பால், வெண்ணெய் வேணுமோ?” என்று கூவ மறந்து, “கோவிந்தா, தாமோதரா, மாதவா,” எனக் கூவுகிறாளாம்.
கண்ணன் திருவடியில்தன் கருத்தினைத் தானிருத்தி
வெண்ணெய் பாலெனவே விற்கநினைப் பின்றியிடைப்
பெண்ணொருத்தி மாதவா தாமோதரா கோவிந்தா வெனக்கூவி
கண்ணனையே விலைபேசி விற்பாள்போல் அலைகின்றாள்.
இந்தக் கதைகளின் நாயகனான குட்டிக் கிருஷ்ணன் நம் அனைவரையும் காக்கட்டும்!