ஒரு சமயம் கண்ணன் எங்கோ சென்று விட்டான். அவனது தாய் யசோதைக்கு கூட அவன் எங்கு சென்றுள்ளான் என்பது பற்றிய தகவல் தெரியாமல் போயிற்று. இந்த சின்னக்கண்ணன் எங்கே போய் விட்டான், என வருந்தினாள்.
சட்டென ராதையின் நினைவு அவளுக்கு வந்தது. ராதாவிடம் கேட்டால், அவன் எங்கே இருக்கிறான் என்பது தெரிந்து விடும், இதற்குப் போய் கவலைப்பட்டோமே! அவளிடம் சொல்லாமல் இந்த மாயவன் எங்கும் போக மாட்டான். அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருப்பவள் ராதை மட்டுமே. கண்ணன் இல்லாவிட்டால் ராதை இல்லை. எனக்கருதியவள் ராதையின் வீட்டிற்குச் சென்றாள். ராதா, கண்ணனைப் பற்றிய சேதி எதாவது உனக்கு தெரியுமா? அவனைக் காணவில்லை. எங்கே போனான்? உன்னிடம் சொன்னானா? பதைபதைப்புடன் கேட்டாள் யசோதை. அப்போது ராதை தெய்வீகப் பரவச நிலையில் ஆழ்ந்திருந்தாள். யசோதை கேட்டது அவள் காதில் விழவில்லை.
இதைக் கவனித்த யசோதை, அவள் கண் விழிக்கட்டுமே எனக் காத்திருந்தாள். சிறிது நேரத்திற்கு பிறகு ராதைக்கு மெல்ல மெல்ல தெய்வீகப் பரவச நிலை கலைந்து உலக நினைவு திரும்பியது. தன் முன்னால் அமர்ந்திருந்த யசோதையைக் கண்டதும் அவள் முன் விழுந்து வணங்கினாள். அம்மா! உங்களைக் காக்க வைத்து விட்டேனே! வந்து நீண்ட நேரமாகி விட்டதா? சொல்லுங்கள்…எதற்காக வந்தீர்கள்? என விசாரித்தாள்.கண்ணனைக் காணவில்லை, அவன் எங்கே இருக்கிறான். உனக்கு தெரியாமல் இருக்காதே… என பரபரப்பாகக் கேட்டாள் யசோதை . ராதாவோ, இதைக் கேட்டு எந்த சலனத்தையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. அம்மா! கண்ணை மூடிக் கொண்டு என் கண்ணனின் உருவத்தை தியானியுங்கள். நீங்கள் அவனைக் காண்பீர்கள், என்றாள். யசோதா கண்களை மூடி தியானிக்க ஆரம்பித்தாள். உடனே ராதை, தனது தெய்வீக சக்தியை யசோதையிடம் செலுத்தினாள். மறுகணமே யசோதையால் கண்ணனைக் காண முடிந்தது. பிறகு யசோதை ராதையிடம், ராதா! நான் கண்களை மூடிக் கொள்ளும் போதெல்லாம், என் அன்பிற்குரிய கண்ணனை நான் பார்க்கும் படியாக செய்ய வேண்டும், என கேட்டுக் கொண்டாள்.
கிருஷ்ணன் வேறு எங்கும் இல்லை. நம் இதயத்திலேயே வாசம் செய்கிறான் என்பதற்கு இந்தக் கதை உதாரணம்.
அருமை
கண்ணன் மற்றும் ஒரு பெயர்
ஹ்ருதயக்கமல வாசன்